வந்தே பாரத்' திட்டத்தின் கீழ்இந்திய விமான சேவைக்கு சவுதி அரேபியா அனுமதி
25 Sep,2020
மேற்கு ஆசிய நாடான, சவுதி அரேபியாவில் இருந்து, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், பயணியரை இந்தியாவிற்கு அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு, இரு தரப்பு விமான சேவை ரத்து செய்யப்படுவதாக, சவுதி அரேபியா அரசு சமீபத்தில் அறிவித்தது.அதேசமயம், அரசு அழைப்பின் பேரில் வரும் பயணியருக்கு மட்டும் அனுமதி உண்டு என, தெரிவித்திருந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், 'சவுதி அரேபியாவில் இருந்து, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், பயணியரை விமானத்தில் அழைத்து வரும் பணி தொடரும்' என, 'டுவிட்டரில்' தெளிவுபடுத்திஉள்ளது.
'லக்கேஜ்' கட்டுப்பாடு தளர்வுகொரோனா பரவலை தடுக்கும் வகையில், நம் நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு, மிகவும் குறைவாகவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், பயணியர் ஒரு, 'லக்கேஜ்' மற்றும் ஒரு கைப்பை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணியர் எடுத்துச் செல்லும் லக்கேஜ் தொடர்பாக, விமான சேவை நிறுவனங்கள் சுயமாக முடிவெடுத்துக் கொள்ளலாம் என, விமான போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதனால், பயணியர் கூடுதல் லக்கேஜ்களை எடுத்துச் செல்ல, விமான சேவை நிறுவனங்கள் அனுமதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது