ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து அறிவிப்பை திரும்ப பெற்ற துபாய்
19 Sep,2020
புதுடில்லி: துபாய் - இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானச் சேவையை 15 நாட்களுக்கு ரத்து செய்வதற்கான துபாய் விமானப்போக்குவரத்து துறையின் அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து துபாய்க்கு கடந்த செப்.,4ம் தேதி சென்ற விமானம் கொரோனா தொற்று இருந்த பயணியுடன் வந்ததால், இன்று (செப்.,18) முதல் அக்.,02 வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் நிறுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் அரசு விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் செய்யப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையிலிருந்து அசல் கொரோனா நெகடிவ் சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.
செப்டம்பர் 2 தேதியிட்ட கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் பெற்ற ஒரு பயணி, செப்டம்பர் 4ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ஜெய்ப்பூர் - துபாய் விமானத்தில் பயணம் செய்தார். இதனையடுத்து, செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை 15 நாட்களுக்கு துபாய் - இந்தியா இடையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை ரத்து செய்வதாக துபாய் விமானப்போக்குவரத்து துறை நேற்று அறிவித்தது. இந்நிலையில், துபாயின் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன்று முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்க தொடங்கியுள்ளது.