இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, வீட்டுக் கடன் திட்டங்களுக்கு 3 சூப்பர் சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள். அந்த சலுகைகள் என்ன? தற்போது எஸ்பிஐ வங்கி, வீட்டுக் கடன்களுக்கு என்ன வட்டி வசூலிக்கிறார்கள். சம்பளதாரர்கள், பெண்கள், சம்பளம் வாங்காதவர்கள்... என யாருக்கு எவ்வளவு வட்டி வசூலிக்கிறார்கள் என்று பார்ப்போம். முதலில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்து இருக்கும் சிறப்பு
சலுகைகளில் இருந்து தொடங்குவோம். சலுகை 1 பொதுவாக, வங்கிகளில் எந்த கடன் வாங்கினாலும், கடனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையையோ அல்லது கடனில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையோ பிராசசிங் கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் எஸ்பிஐ வங்கியில், வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது எஸ்பிஐ. சலுகை 2 இதுவரை வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தி இருக்கும்
வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும். அப்படி நல்ல சிபில் ஸ்கோர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், எஸ்பிஐயில் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் 1 கோடி ரூபாய்க்குள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால் 0.10 % வட்டி சலுகை கொடுப்பார்களாம். சலுகை 3 இன்று உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. எஸ்பிஐ வங்கி, யோனோ அப்ளிகேஷன் மூலம், தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான எல்லா சேவைகளையும் வழங்கி வருகிறது. இப்போது எஸ்பிஐ வங்கியில்,
வீட்டுக் கடனுக்கு யோனோ செயலி மூலம் விண்ணப்பித்தால், 0.05 % (5 அடிப்படைப் புள்ளிகள்) வட்டிச் சலுகை கொடுப்போம் எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ. ஆதாரம் என்ன மேலே சொன்ன இந்த மூன்று சலுகைகளையும் தருவதாக, எஸ்பிஐ, தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வீடியோ மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தி இருக்கிறது. இந்த 3 சலுகைகளிலும் ஒரு * குறியீடு இருக்கிறது. * குறியீட்டுக்கு T & C Apply என ட்விட்டில் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ. இந்த சலுகைகளைப் பெற என்ன விதிகளை (Terms & Conditions) பின் பற்ற வேண்டும், யாருக்கு எல்லாம் இந்த சலுகைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இன்னும் தெளிவாக
விளக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும். சரி தற்போது எஸ்பிஐ டேர்ம் லோன் திட்டத்தின் கீழ், வீட்டுக் கடனுக்கு என்ன வட்டி வசூலிக்கிறார்கள் என்று பார்ப்போம். 30 லட்சம் ரூபாய்க்குள் டேர்ம் லோன் திட்டத்தின் கீழ், எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 6.65 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.35 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைக்கிறார்களாம். ஆக மொத்தம் 6.65 + 0.35 = 7.00 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
30 - 75 லட்சம் ரூபாய் வரை அதே டேர்ம் லோன் திட்டத்தின் கீழ் எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் உடன் 0.60 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 6.65 + 0.60 = 7.25 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் - 75 லட்சம் ரூபாய்க்குள் வீட்டுக் கடன் வாங்கலாம். இதுவும் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 75 லட்சம் ருபாய்க்கு மேல் எஸ்பிஐ டேர்ம் லோன் திட்டத்தின் கீழ், வங்கியின் EBR - 6.65 சதவிகிதத்துடன்
0.70 சதவிகித வட்டியை பிரீமியமாக வைக்கிறார்கள். ஆக மொத்தம் 6.65 + 0.70 = 7.35 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கொஞ்சம் கூடுதல் வட்டி - சம்பளம் வாங்காதவர்களுக்கு சம்பளம் வாங்காதவர்கள், சுய தொழில் செய்பவர்கள் எல்லாம், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவைப் பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்களைக் கணக்கிடுவார்கள். அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் வட்டி வசூலிப்பார்களாம். அதே போல மொத்த வீட்டின் மதிப்பில் 80 சதவிகிதத்துக்கு மேல், 90 சதவிகிதத்துக்குள்
கடன் வாங்கினாலும் 0.10 % கூடுதல் வட்டி செலுத்த வேண்டி இருக்கும் என்கிறது எஸ்பிஐ வலைதளம். பெண் வாடிக்கையாளர்களுக்கு சலுகை பெண்கள், எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினால், வீட்டுக் கடனுக்கு வசூலிக்கும் மொத்த வட்டியில் 0.05 சதவிகிதம் (5 அடிப்படை புள்ளிகள்) சலுகை வேறு கொடுக்கிறார்களாம். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள், இதுவரை வரலாறு காணாத அளவுக்கு சரிந்து இருக்கிறது. நல்ல வேலையில் இருப்பவர்கள், இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்