கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தது
04 Sep,2020
‘ஆக்ஸ்போர்டு’ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்து சென்னை வந்தது.இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:-
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் மும்முரமாக உள்ள நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒரு தடுப்பூசியை கண்டுபிடித்து இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்து டெல்லியில் உள்ள ‘ஷீரம் இன்ஸ்டியூட்’ மூலமாக தமிழக அரசுக்கு கிடைத்து இருக்கிறது. இதில் தற்போது முதல்கட்டமாக 300 ஊசி மருந்துகள் இன்று(நேற்று) சென்னை வந்துள்ளன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய 2 இடங்களிலும் தலா 150 பேர் வீதம் 300 பேருக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.
இந்த தடுப்பூசி ஒருவருக்கு 2 முறை செலுத்தப்பட உள்ளது. முதல்முறை தடுப்பூசி போட்டபிறகு 4 வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு தடுப்பூசி போடப்படும்.
இந்த தடுப்பூசியை போடுவதற்காக ஆரோக்கியம் உள்ள 150 பேரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்