போதிய பயணிகள் இல்லாததால் குவைத், கத்தார் நாட்டு சிறப்பு விமானங்கள் ரத்து
03 Sep,2020
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா ஊரடங்கு காரணமாக சிக்கித்தவித்த இந்தியர்களை மத்திய அரசு ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் அழைத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 பேரும், மஸ்கட்டில் இருந்து 176 பேரும் என 219 பேர்களுடன் 2 சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன.
இந்த விமானங்களில் வந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மருத்துவ பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ்களுடன் வந்தனர். இதனால் விமான நிலையத்தில் உள்ள சிறப்பு கவுண்ட்டரில் இ-பாஸ் பெற்று கொண்டு 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள புறப்பட்டு சென்றனர். அவ்வாறு மருத்துவ சான்றிதழ்களுடன் வராதவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 2 சிறப்பு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. அதில், குவைத், கத்தார் நாடுகளில் இருந்து புறப்படும் பயணிகள் விமான நிலையங்களில் மருத்துவ சான்றிதழை காண்பித்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே விமானங்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மருத்துவ சான்றிதழ்களை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், போதிய பயணிகள் இல்லாமல் 2 விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.