உள்நாட்டு விமான சேவையை 60% வரை உயர்த்தி கொள்ள அனுமதி
03 Sep,2020
உள்நாட்டு விமான சேவையை 60 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள, விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. மார்ச் 23 முதல் உள்நாடு, வெளிநாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அளித்து வரும் மத்திய அரசு, மே 25 முதல் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கியது.
இருப்பினும், 33 சதவீத விமானங்களை மட்டும் இயக்கி கொள்ள விமான நிறுவனங்களுக்கு அனுமதித்திருந்தது. தொடர்ந்து தளர்வுகளை அளித்த மத்திய அரசு, கடந்த ஜூன் 26 முதல் 45 சதவீத உள்நாட்டு விமான சேவையை இயக்க அனுமதித்தது. இந்நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையை மேலும் அதிகரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதன்படி, 60 சதவீத உள்நாட்டு விமான சேவைகளை விமான நிறுவனங்கள் இயக்கலாம். சர்வதேச விமான சேவைக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 'வந்தே பாரத்' திட்டத்திற்கான சிறப்பு விமானங்களுக்கு எந்த தடையும் இல்லை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.