நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 7ம் தேதியில் இருந்து, 'மெட்ரோ' ரயில் சேவைகளை துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் மாநிலங்கள் இடையேயான போக்குவரத்துக்கு எந்தத் தடையையும் மாநிலங்கள் விதிக்கக் கூடாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முன் அனுமதியில்லாமல், மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என்றும், மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுதும், மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே, 31 வரை நீடித்தது. நெறிமுறைஅதைத் தொடர்ந்து, ஜூன், 1ம் தேதி முதல், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு நாளையுடன் முடிகிறது.இதையடுத்து, நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், செப்., 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று இரவு வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:நான்காம் கட்ட தளர்வுகள் தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகளுடன் பேச்சு நடத்தப்பட்டது. அதன்படி, செப்., 1 முதல், கட்டுப்பாடு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் பல்வேறு சேவைகள், துறைகளின் செயல்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
latest tamil news
வரும், செப்., 7ம் தேதி முதல், மெட்ரோ ரயில் சேவைகளை படிப்படியாக துவக்கலாம். இது தொடர்பாக விரிவான செயல்பாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். சமூக, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, மதம், அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள், கூட்டங்களை, செப்., 21ம் தேதியில் இருந்து நடத்துவதற்கு அனுமதிக்கப்படும்.அதிகபட்சம், 100 பேர் மட்டுமே இதில் பங்கேற்கலாம். அதே நேரத்தில், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கிருமி நாசினி தெளிப்பது, உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். செப்., 21ம் தேதி முதல் திறந்த நிலை தியேட்டர்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.மாநில அரசுகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பின், பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை, செப்.,30ம் தேதி வரை திறக்க அனுமதி கிடையாது. 'ஆன்லைன்' மூலமாக வகுப்புகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.கட்டுப்பாடு பகுதிகள் அல்லாத இடங்களில், 50 சதவீத ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம். ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது உள்ளிட்டவற்றுக்காக இவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. பெற்றோரின் ஒப்புதலுடன், 9 - 12ம் வகுப்பு மாணவர்கள், செப்., 21க்குப் பின், பள்ளிகளுக்கு நேரில் சென்று, ஆசிரியர்களிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
தன்னார்வ அடிப்படையில் இந்த அனுமதி அளிக்கப்படுகிறது.தேசிய திறன் பயிற்சி மையங்கள், தொழிலக பயிற்சி மையங்கள் போன்றவை நடத்தும் பயிற்சி வகுப்புகளை, செப்., 21க்குப் பிறகு துவக்க அனுமதிக்கப்படுகிறது. இணையதளம்அதேபோல் தொழில்முனைவோர் பயிற்சி போன்றவையும், பிஎச்.டி ஆராய்ச்சி மாணவர்கள், தொழில்நுட்ப மற்றும் தொழில் முறையிலான பாடங்களைப் படிக்கும் முதுகலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவக்கவும் அனுமதிக்கப்படுகிறது.தியேட்டர்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்கா, போன்றவற்றுக்கான தடை தொடரும். மத்திய அரசு ஏற்கனவே அனுமதித்தவை தவிர, வெளிநாட்டு விமானப் பயணத்துக்கான தடை தொடரும். கட்டுப்பாடு பகுதிகள் குறித்த தகவல்களை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநில அரசுகள், தங்களுடைய இணையதளங்களில் வெளியிட வேண்டும்.
கட்டுப்பாடு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் முழு ஊரடங்கை எந்த மாநில அரசும் அறிவிக்கக் கூடாது. மத்திய அரசின் ஆலோசனையைப் பெற்று, இந்த அறிவிப்பை வெளியிடலாம். மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. அதற்காக எந்த முன் அனுமதியும் பெறத் தேவையில்லை. இ- பாஸ் முறையை தொடரத் தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.