சீன இணையதளம் மூலம் சூதாட்டம்; ரூ.47 கோடி கொண்ட 4 வங்கி கணக்குகள் முடக்கம் - அமலாக்க இயக்குனரகம் அதிரடி
30 Aug,2020
தெலுங்கானா மாநிலத்தில் சீன இணையதளம் மூலமாக இணைய வழி சூதாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் பல சீன இணையதளம் மூலம் இணைய வழி சூதாட்டம் நடத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, குர்கான், மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க இயக்குனராக அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சீன இணையதளம் மூலம் இணைய வழி சூதாட்டம் நடத்திய நிறுவனங்களில் இருந்து மடிக்கணினிகள், செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூ.46 கோடியே 96 லட்சம் தொகையுடன் மோசடி நிறுவனங்களின் பெயரில் இருந்த 4 வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் முடக்கியது. இந்த மோசடி தொடர்பாக மேலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.