பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை பயங்கரவாதிகள் தோண்டிய சுரங்கம் கண்டுபிடிப்பு
29 Aug,2020
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதிவரை தோண்டப்பட்டிருந்த சுரங்கத்தை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
எல்லையில் நிலவும் பதற்றத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை ஒழிக்க, பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு நிலைகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் உள்ள எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்பு படையின் சிறப்பு குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதி வரை தோண்டப்பட்டிருந்த சுரங்கத்தை கண்டுபிடித்து அழித்தனர்.
இந்த சுரங்கம் ஜீரோ லைனில் இருந்து 150 யார்டுகள் நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்தது. சுரங்கத்தின் வாசற்பகுதியானது, சரிந்துவிடாதபடி மணல் மூட்டைகள் மூலம் கச்சிதமாக வலுப்படுத்தப்பட்டிருந்தது.
இதுபற்றி எல்லைப் பாதுகாப்பு படையின் ஐஜி என்.எஸ்.ஜாம்வால் கூறுகையில், ‘இந்த சுரங்கமானது பாகிஸ்தானில் ஆரம்பித்து சம்பா வரை நீண்டுள்ளது. சுரங்கத்தை வலுப்படுத்த வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளில் பாகிஸ்தான் அடையாளம் உள்ளது. எனவே, திட்டமிட்டு இந்த சுரங்கம் தோண்டப்பட்டிருப்பது தெளிவாகிறது. பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் மற்றும் பிற ஏஜென்சிகளின் ஒப்புதல் மற்றும் ஆதரவு இல்லாமல் இவ்வளவு பெரிய சுரங்கப்பாதையை கட்ட முடியாது’ என்றார்.