குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அறிவித்த, 3 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தயாராக உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது
.மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், இந்திய தொழிலக கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இது குறித்து இக்கூட்டமைப்பு, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள தகவல்:கொரோனா காரணமாக, சுற்றுலா, ரியல் எஸ்டேட், விருந்தோம்பல், விமான சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து, நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்தார்.
மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, உத்தரவாதமற்ற வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டத்தை அறிவித்திருந்தது. இம்மாத துவக்கத்தில், இக்கடனுக்கான வரம்பு, 25 கோடியில் இருந்து, 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அத்துடன், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் போன்றவர்கள், வர்த்தக அடிப்படையில் இக்கடனை பெறலாம் என, தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த, 20ம் தேதி வரை, இத்திட்டத்தின் கீழ், வங்கிகள், 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கிஉள்ளன. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதேசமயம், கொரோனா சவால்களை சமாளிக்கும் அரசு அறிவிப்புகளில், அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதைவும் அவர் சுட்டிக் காட்டினார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது