'ஏர் இந்தியா' பங்கு விற்பனை விண்ணப்ப காலம் நீட்டிப்பு
26 Aug,2020
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையில் விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் பங்கு விற்பனையில் பங்கேற்க விண்ணப்பிக்கும் காலம், மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, ஜன., 27ல், ஏர் இந்தியா பங்குகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள், மார்ச், 17க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால், விண்ணப்பிக்கும் காலம், ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்பின், ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டு, பின்னர், ஆக., 31க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பங்கு விலக்கல் மற்றும் பொது சொத்து நிர்வாகத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'ஏர் இந்தியா நிறுவன பங்கு விற்பனைக்கான விண்ணப்ப காலம், மேலும் இரு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நவ.,20 வரை நிறுவனங்கள், ஏர் இந்தியா நிறுவன பங்கு விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது