தமிழகத்தில் தனிமைப்படுத்தலில் தளர்வுகள் இல்லாததால் சென்னைக்கு வர அச்சப்படும் வெளிநாட்டு பயணிகள், பிற நகரங்களில் இறங்கி உள்நாட்டு விமானங்களில் வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு வருபவர்கள் விமான நிலையங்களில் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் 14 நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என அறிவித்தது.
இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை இதில் சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி சிறப்பு விமானங்களில் பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, நோய் தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழ்களுடன் வருபவர்களுக்கு அரசின் தனிமைப்படுத்துதல் தேவையில்லை. ஆனால் அவர்கள் வீடுகளில் 14 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்கள், கர்ப்பிணிகள், இறப்புக்காக வருபவர்கள், மருத்து உதவி பெறுபவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தி கொள்ளலாம். மற்றவர்கள் 7 நாட்கள் மட்டும் அரசின் தனிமைப்படுத்துதலிலும், மீதி 7 நாட்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த புதிய நடைமுறை இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் செயல்படுத்த தொடங்கிவிட்டன. ஆனால் தமிழகத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மட்டும் தமிழக சுகாதாரத்துறையினர் மத்திய அரசின் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த மறுக்கின்றனர். பழைய முறைபடியே மருத்துவ பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் அனைத்தும் நடக்கின்றன.
இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், “மத்திய சுகாதாரத்துறை அதைபோன்ற தளர்வுகளை அறிவித்து, அதை அந்தந்த மாநிலங்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் இந்த தளர்வுகளை அனுமதித்தால் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிவிடும். எனவேதான் நாங்கள் ஏற்கனவே உள்ள நடைமுறையை செயல்படுத்துகிறோம். அதே நேரத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்ததும், நோய்தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானவர்களை மீதி 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறோம்” என்றனர்.
ஆனால் சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் வரும் பயணிகள், 96 மணிநேர மருத்துவ சான்றிதழ்களுடன் வந்து, “நாங்கள் அரசின் தனிமைப்படுத்தல் முகாமுக்கு செல்ல மாட்டோம். வீடுகளில் தான் எங்களை தனிமைப்படுத்திக்கொள்வோம்” என்று வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். “மத்திய அரசு கூறியும் நீங்கள் ஏன் எங்களைவிட மறுக்கிறீர்கள்?” என்று கேட்டும் அதிகாரிகளிடம் சண்டைபோடுகிறார்கள்.
போலீசாரும், பாதுகாப்பு அதிகாரிகளும் பயணிகளை அமைதிப்படுத்தி சமரசம் செய்து வைக்கின்றனர்.
இதனால் தற்போது வெளிநாடுகளில் இருந்து 96 மணிநேர மருத்துவ சான்றிதழ்களுடன் வரும் பயணிகள், நேரடியாக சென்னை பன்னாட்டு விமான நிலையம் வருவதை தவிர்க்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பல சிறப்பு விமானங்கள் டெல்லி, ஐதராபாத், விஜயவாடா, கொச்சி, பெங்களூரு போன்ற விமான நிலையங்கள் வழியாகவே சென்னைக்கு வருகின்றன.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் சென்னைக்கு நேரடியாக வராமல் அச்சப்பட்டு பிற நகரங்களில் இறங்கி விடுகின்றனர். பின்னர் அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மார்க்கமாக சென்னை வருகின்றனர்.
சென்னைக்கு உள்நாட்டு விமானங்களில் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனையோ, அரசின் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலோ கிடையாது. பயணிகள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே சிறப்பு விமானங்களில் சென்னைவரும் பயணிகள் இந்த முறையை தற்போது பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
அபுதாபியில் இருந்து விஜயவாடா வழியாக சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் 110 இந்தியர்கள் வருவதாக இருந்தது. ஆனால் அனைத்து பயணிகளும் விஜயவாடாவிலேயே இறங்கிவிட்டனர். இதனால் விஜயவாடாவில் இருந்து சிறப்பு விமானம் காலியாகவே சென்னை வந்தது.
அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் வந்த 125 பேரில் 24 பேர் மட்டுமே சென்னை வந்தனர். 101 பேர் விஜயவாடாவில் இறங்கிவிட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்தவர்களில் 100 பேர் சென்னை வருவதாக இருந்தது. ஆனால் 50 பேர் மட்டுமே சென்னை வந்தனர். மீதி 50 பேர் டெல்லியில் இறங்கிவிட்டனர்.
இவ்வாறு சென்னைக்கு 4 சிறப்பு விமானங்களில் வந்த 408 இந்தியர்களில் 139 பேர் மட்டுமே சென்னை வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மீதி 269 பேர் டெல்லி, விஜயவாடா விமான நிலையங்களில் இறங்கிவிட்டனர். அவர்கள் உள்நாட்டு விமானங்களில் கொரோனா பரிசோதனைகள் எதுவும் இல்லாமல் சென்னைக்கு வரும்நிலை ஏற்பட்டு உள்ளது.