: ''சென்னையில், ரவுடித்தனம் உள்ளிட்ட, எந்த விதமான குற்றங்களுக்கும் இடமில்லை. ரவுடித்தனம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
நாடு முழுதும், விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. தனி நபர்கள், வீடு மற்றும் கோவில்கள் முன், சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் அமைத்து, வழிபாடு செய்து நீர்நிலைகளில் கரைக்கலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துஉள்ளது. அதன்படி சென்னை காமராஜர் சாலை, சாந்தோம் பகுதியில் இருந்து, நேப்பியர் பாலம் வரையிலான கடலில், விநாயகர் சிலைகளை கரைக்கக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது.
அப்பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். அவற்றை, கலங்கரை விளக்கம் அருகே, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று ஆய்வு செய்தார். பின், மகேஷ்குமார் அகர்வால் அளித்த பேட்டி:சென்னையில், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில், அதிகாரிகள் உட்பட, 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொது வெளிகளில், விநாயகர் சிலைகள் அமைப்பதற்கு அரசு விதித்துள்ள தடைகள் குறித்து, ஹிந்து அமைப்பு நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்தி, விளக்கி உள்ளோம். சில இடங்களில், விநாயகர் சிலைகளை வைக்க முயற்சி செய்தனர். அந்த சிலைகளை, வீடுகள் முன் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தடையை மீறி, சிலைகள் வைத்தது தொடர்பாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தனி நபர்கள், நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க, தடையும் இல்லை. சிலைகள் கரைக்கும் போது, கட்டாயம் அவர்கள் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.ரவுடித்தனம் உள்ளிட்ட, எந்த வித குற்றங்களையும் அனுமதிக்க முடியாது. கஞ்சா மற்றும் குட்கா விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காக, பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.