லிபுலேக் கணவாய் பகுதியில் சீன பெருமளவு படைகள் குவிப்பு ?
20 Aug,2020
புதுடில்லி: இந்தியா சீனா இடையே எல்லை பிரச்னை இருந்து வரும் நிலையில், லீபுலேக் கணவாய் பகுதியில் சீன தனது படைகளை குவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க எல்லையில் இரு நாட்டு படைத் தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பிலிருந்து கணிசமான படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இந்திய, நேபாள, சீன எல்லைப்பகுதியான இந்தியாவிற்கு சொந்தமான உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான கலாபானி பள்ளத்தாக்கின் லிபுலேக் கணவாய் பகுதியில் சீன ராணுவம் தனது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே நேபாளம் தனது புதிய வரைபடத்தில் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலையில் தற்போது சீன ராணுவம் படைகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.