மெதுவான மீட்சிக்கு திரும்பும் உள்நாட்டு விமான போக்குவரத்து
16 Aug,2020
உள்நாட்டு விமான போக்குவரத்து, மெதுவாக மீட்சியை அடைந்து வருகிறது. கடந்த ஜூலையில் உள்நாட்டு விமான போக்குவரத்து, அதற்கு முந்தைய மாதத்தை விட, 6.1 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம், 19.84 லட்சம் பேர் பயணம் செய்திருந்த நிலையில், ஜூலையில், 21.07 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இது, 6.1 சதவீதம் அதிகமாகும்.கொரோனா தொற்றால் மிகக் கடுமையாக இத்துறை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த சிறு வளர்ச்சி ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது, 82.3 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.கடந்த ஜூலையில், 21.07 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலையில் மொத்தம், 1.19 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
விமான நிறுவனங்களை பொறுத்தவரை, பயணியர் எண்ணிக்கை, ‘ஸ்பைஸ் ஜெட்’டில் அதிகமாக இருந்துள்ளது. இந்நிறுவனத்தின் விமானங்களில், 70 சதவீதம் அளவுக்கு இடங்கள் நிரப்பப்பட்டிருந்தன.இதையடுத்து, ‘இண்டிகோ’ 60.2 சதவீதமும்; ‘கோஏர்’ 50.5 சதவீதமும்; ‘ஏர் ஆசியா’ 53.1 சதவீதமும் பெற்றிருந்தன.இவற்றில், ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தான், ஜூன் மாதத்தை விட ஜூலையில் அதிக பயணியர் பயணித்துள்ளனர்.