கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
கோழிக்கோடு காரிபூர் விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் 24 அவசர ஊர்தி வாகனங்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
விபத்துக்குள்ளான விமானம்
துபையில் இருந்து கோழிக்கோடுக்கு ஏர் இந்தியாவின் X1344 விமானம் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) 7.41 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைகிறார் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர்
விபத்து நடந்துள்ள கோழிக்கோடு விமான நிலையத்துக்கு நேரில் உள்ளதாக இந்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
"வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபையிலிருந்து 190 பயணிகளுடன் கோழிக்கோடு வந்த இந்த விமானத்தை விமானி தரையிறக்க முயற்சிக்கும்போது அங்கிருந்த மழைக்கால சூழ்நிலையின் காரணமாக சறுக்கிவிட்டது" என்று அவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"விமானத்தில் தீப்பிடித்திருந்தால் மீட்புப்பணிகள் இன்னும் கடினமானதாக இருந்திருக்கும். நான் சம்பவம் நடந்த கோழிக்கோடு விமான நிலையத்திற்கு செல்கிறேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது ஏர் இந்தியா நிர்வாகம்?
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் தலைமை செயலதிகாரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலரும் ஏற்கனவே சம்பவம் நிகழ்ந்த கோழிக்கோடு விமான நிலையத்தை சென்றடைந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து மொத்தம் மூன்று சிறப்பு நிவாரண விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"கோழிக்கோடு, மும்பை, டெல்லி மற்றும் துபாய் உள்ளிட்ட இடங்களிலுள்ள துறைசார் அதிகாரிகளுடன் அவசரகால பணிக்குழுவின் இயக்குநர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறார். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக விமான விபத்து விசாரணை பணியகம், விமானப் போக்குவரத்து ஆணையகரம், விமானப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்தை சென்றடைந்துவிட்டனர்."
மீட்புப்பணிகள் தீவிரம்
சம்பவ இடத்தில் மழை பெய்து வருகிறது. இதுவரை 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் 100-க்கும் அதிகமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விமான விபத்து தொடர்பாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தமது டுவிட்டர் பக்கத்தில், மீட்பு மற்றும் விமான பயணிகளுக்கு உதவுவதற்காக டெல்லி, மும்பையில் இருந்து மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 16 பேர் பலியானதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர் என்றும், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் இருந்தனர் என்றும் இந்திய விமான போக்குவரத்துத்துறை ஊடகப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
"முதற்கட்ட தகவலின்படி மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலதிக தகவலகளை விரைவில் பகிர்கிறேன்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளா விமான விபத்து
ஓடுபாதையைவிட்டு விலகிய விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது என இந்திய விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், மீட்புப் நடவடிக்கைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வந்து கொண்டிருக்கும் தகவல்களின்படி விமானத்தில் தீப்பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது இதுவரை தெரியவில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களில் விமான இரண்டாக உடைந்திருப்பது தெரிகிறது.
இந்த விபத்து குறித்து மேலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
"துபாயிலிருந்து கோழிகோடு வந்த ஏர் இந்திய விமானம் IX 1344 ஓடுபாதையை விட்டுவிலகி விபத்துக்குள்ளானது. மேலதிக தகவல்களை தொடர்ந்து பகிர்கிறோம்," துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கோழிக்கோடு விமான சம்பவத்தை கேள்விப்பட்டு மிகவும் வலியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். உறவுகளை பறிகொடுத்தவர்களுடன் தமது நினைவுகள் இருக்கும் என்றும் கூறியுள்ள அவர், விமான சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரதமர் மோதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
மேலும், விமான சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடனும் தாம் பேசியிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"கோழிக்கோடில் நடந்த மோசமான விபத்து குறித்து அறிந்து துயருற்றேன். தேசிய பேரிடம் மீட்பு குழுவை சம்பவ இடத்திற்கு விரைவில் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்." என உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.