கோழிக்கோடு விமான விபத்தில் இறந்த பைலட் சாதே யார்?
08 Aug,2020
கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி சாதே உள்பட 19 பேர் பலியாகினர். இந்நிலையில் சாதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
துபாயில் இருந்த வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில், ஓடுதளத்தில் இறங்கிய போது விபத்துக்குள்ளானதில் விமானி டி.எம். சாதே உள்பட 19 பேர் பலியாகினர். இந்நிலையில், உயிரிழந்த விமானி டி.எம்.சாதே குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த இவர், 1981ம் ஆண்டு, புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து, சிறந்த வீரருக்கான Sword of Honour என்ற தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் இந்திய விமானப்படையில், விமானியாக சேர்ந்த சாதே, 22 ஆண்டுகள் போர் விமானங்களை இயக்கி வந்துள்ளார்.
விமானப்படையில் பல்வேறு பிரிவுகளில், 2003ம் ஆண்டு வரை, 22 ஆண்டுகள் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். 2003ம் ஆண்டு விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற சாதே, ஏர் இந்தியாவில் சேர்ந்து, பயணிகள் விமான விமானியாக பணியாற்றி வந்தார். முதலில், ஏர் பஸ் 310-ரக பெரிய விமானங்களை இயக்கி வந்த இவர், பின்னர் போயிங் 737 ரக விமானங்களை இயக்கி வந்தார். சாதே, மிகுந்த தொழில் நிபுணத்துவமும், அனுபவமும் வாய்ந்தவர் என்று சக விமானிகளும், அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.