சீன ராணுவம் தொடர்ந்து முகாம்: எல்லையில் பதற்றம் நீடிப்பு
06 Aug,2020
ராணுவ உயரதிகாரிகள் நிலையிலான பேச்சு நடந்த பிறகும், சீனா தன் படைகளை திரும்பப் பெறாததால், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்னை மோசமடைந்து வருகிறது. இரு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து, படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பல கட்டங்களாக, பல நிலைகளிலும் பேச்சு நடந்துள்ளது. அதன் பிறகும், பாங்காங், தேப்சாங், கோக்ரா பகுதிகளில் இருந்து சீனா தன் படைகளை திரும்பப் பெறவில்லை.இந்தப் பகுதிகளில், அதிக அளவு சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளதுடன், ஆயுதங்கள், பீரங்கிகள் என, தளவாடங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், 'இரு நாட்டின் உயர்நிலை அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இடையேயான பேச்சு நடப்பதே, உடனடி தீர்வாக இருக்கும்' என, நிபுணர்கள் கூறுகின்றனர் .இதற்கிடையே, சீன விவகாரம் தொடர்பான உயர்நிலை குழு கூட்டமும் சமீபத்தில் நடந்தது. இந்தக் குழுவில், வெளியுறவு, உள்துறை மற்றும் ராணுவத் துறைக்கான செயலர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவலும் பங்கேற்றனர்