அயோத்தி இராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று!
05 Aug,2020
அயோத்தி இராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த நிகழ்வுகளையொட்டி கொரோனா மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்காக அயோத்தியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அயோத்தி நகரில் உள்ளூர்வாசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக அவர்களது அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அயோத்தியில் கோவில்கள், மசூதிகள் திறந்திருந்தாலும் இன்று வேறு எந்த மதச்சடங்குகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் 1528ஆம் ஆண்டு பாபர் ஒரு மசூதியை கட்டினார் என்பது இந்துக்களின் வாதம். இதைத்தொடர்ந்து 1885ஆம் ஆண்டு அந்த இடத்தில் ஒரு இராமர் கோவில் கட்டவேண்டும் என்று மகந்த் ரக்பிர்தாஸ் என்பவர் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அன்று தொடங்கிய சட்டப்போராட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்பினை வழங்கியது. இதன் அடிப்படையில் இன்று இராமர் கோவிலுக்கான அடிகல் நாட்டு வைபவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.