ஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்
05 Aug,2020
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலை மீது இஸ்லாமிய அரச பயங்கரவாதிகள் (ஐ.எஸ்) நடத்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் இந்தியப் பிரஜை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட 11 இஸ்லாமிய அரசு பயங்கரவாதிகளில் குறைந்தது மூன்று பேர் இந்தியவைச் சேர்ந்தவர்கள் என்று ஆப்கானிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலின் தலைவர் கேரளாவின் காசர்கோட் நகரைச் சேர்ந்த கலுக்கேட்டியா புராயில் இஜாஸ் என்று நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை சிறைச்சாலை நுழைவாயிலில் ஒரு டிரக் உடன் தன்னைத்தானே வெடித்துக் கொண்டவர் கலுகெட்டியா புராயில் இஜாஸும் தான் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே ‘ஜலாலாபாத் தாக்குதலில் ஈடுபட்ட இந்தியர்கள்’ ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இஸ்லாமிய அரசின் காசர்கோட் தொகுதியைக் கண்டுபிடிக்க இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலை ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டது. தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்பில் பொதுமக்கள், கைதிகள், காவலர்கள் மற்றும் ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலின் நோக்கம் உடனடியாக தெளிவாக இல்லை. இருப்பினும், அங்குள்ள 1,500 கைதிகளில் சிலர் இந்த சம்பவத்தின்போது தப்பியோடியுள்ளனர்.
ஜலாலாபாத் சிறைச்சாலையில் உள்ள பல நூறு கைதிகள் இஸ்லாமிய அரசு உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது.
ஜலாலாபாத் அருகே மூத்த இஸ்லாமிய அரசு தளபதியை ஆப்கான் சிறப்புப் படைகள் கொன்றதாக அதிகாரிகள் கூறிய ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜலாலாபாத் சிறைத் தாக்குதலில் தொடர்புடைய 11 ஐ.எஸ் தாக்குதல்காரர்களின் பெயர்களை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்களின்படி, இதில் குறைந்தது மூன்று பேர் இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆவர்.