கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, கடந்த மார்ச் 25-ந் தேதி நாடுதழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தொற்று குறைந்தபாடில்லை.
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, நாளை (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட உள்ள மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில், இந்த வழிகாட்டுநெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* இரவு நேரங்களில் தனிநபர் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. அதாவது, இரவு நேர ஊரடங்கு இனிமேல் கிடையாது.
* யோகா பயிற்சி நிலையங் கள், ஜிம்கள், ஆகஸ்டு 5-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட விதிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் தனியாக வெளியிடும்.
* சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி உண்டு. ஆனால், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* மாநிலங்களுடன் நடத்திய விரிவான ஆலோசனை அடிப்படையில், ஆகஸ்டு 31-ந் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிலையங்கள் திறக்க அனுமதி கிடையாது.
* ‘வந்தே பாரத்‘ திட்டத்தின்கீழ், சர்வதேச விமான பயணம், குறைந்த அளவுக்கு அனுமதிக்கப்படுகிறது. இந்த சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும்.
கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு தடை தொடரும்.
* மெட்ரோ ரெயில்.
* சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள், நாடக அரங்குகள், மதுபான விடுதிகள், ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள்.
* சமூகம், அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசாரம், மதம் ஆகியவை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகள்.
மேற்கண்ட செயல்பாடுகளை எந்த தேதியில் இருந்து அனுமதிப்பது என்பது பற்றி சூழ்நிலைக்கேற்ப தனியாக முடிவு செய்யப்படும்.
மேற்கண்ட செயல்பாடுகளை தவிர, மற்ற அனைத்து செயல்பாடுகளும் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து பிற பகுதிகளில் அனுமதிக்கப்படும்.
* கட்டுப்பாட்டு பகுதிகளில், ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு பகுதிகள் கவனமாக வரையறுக்கப்பட வேண்டும். அப்பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
* கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளங்களிலும், மத்திய, மாநில அரசுகளாலும் அறிவிக்கப்படும்.
* கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்களின் செயல்பாடுகளை மாநில, யூனியன் பிரதேச அதிகாரிகள் கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். அதை மத்திய சுகாதார அமைச்சகம் கண்காணிக்கும்.
* கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மாநில, யூனியன் பிரதேசங்கள் தடை செய்யலாம். அல்லது, தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஆனால், மாநிலங்களுக்கிடையிலும், மாநிலத்துக்கு உள்ளேயும் தனிநபர்கள் நடமாட்டம் மற்றும் சரக்குகள் கொண்டு செல்ல தடை விதிக்கக்கூடாது. அதற்கு தனியாக அனுமதியோ, இ-பாஸோ பெறத் தேவையில்லை.
* கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நாடுதழுவிய உத்தரவுகள், நாடு முழுவதும் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும். கடைகள் முன்பு வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படுவதை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும்.
* நோய் எளிதில் தாக்க வாய்ப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பிற நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரக்கூடாது.
* ‘ஆரோக்ய சேது‘ மொபைல் செயலி பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.