உயிரி ஆயுதம் தயாரிப்பா?: பாகிஸ்தான் மறுப்பு
27 Jul,2020
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த, ஆபத்து மிக்க உயிரி ஆயுதங்களை சீனாவுடன் இணைந்து தயாரிப்பதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
கடந்த மாதம், லடாக் எல்லையில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில், இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக, சீனாவுக்கு எதிராக, இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, சுவீடன் உட்பட, பல நாடுகள் போக்கொடி தூக்கியுள்ளன. இதற்கிடையே கொரோனா வைரஸ் விவகாரத்திலும் பல உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ளன.
இந்நிலையில், இந்த நாடுகளின் எதிர்ப்புகளை சமாளிக்க, மிகவும் ஆபத்தான ‛பயோ வெபன்' எனப்படும் உயிரி ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில், சீனா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி, ஆஸ்திரேலிய பத்திரிகையில் ‛இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை தூண்டி விடுவதற்காக, இந்த திட்டத்தில், சீனா அதிக ஆர்வம் காட்டுவதாகவும், தன் நிலத்துக்கும், மக்களுக்கும் ஆபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கவே, சீனா, அபாயகரமான உயிரி ஆயுதங்கள் ஆராய்ச்சிக்காக பாகிஸ்தானை தேர்ந்தெடுத்துள்ளதாகவும்' செய்தி வெளியானது.
இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது. 'அரசியல் உள்நோக்கத்துடன், திட்டமிட்டு இந்த தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது' என, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.