ராஜீவ் காந்தி கொலை வழக்கு : ஆளுநர் முடிவெடுக்காமை குறித்து நீதிபதிகள் அதிருப்தி!
23 Jul,2020
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணைகோரும் மனு மீதான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காமை குறித்து அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பிணை வழங்குமாறுகோரி அவரது தாயாரான அற்புதம்மாள் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுமீதான விசாரணை நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது சிறை விதிகளின்படி 2 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பிணை வழங்க முடியும் எனவும் 2019ம் ஆண்டில் பிணை வழங்கப்பட்டதால் இனி 2 ஆண்டுக்கு பிறகுதான் பிணை வழங்க முடியும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஏழு பேரின் விடுதலை தொடர்பான தீரமானம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் 2 ஆண்டுகள் கடந்தும் ஆளுநர் முடிவை அறிவிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியதுடன், மனுவை 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.