‛நிதி நிலைமை மிகவும் சவாலாக உள்ளது' : ஏர் இந்தியா
18 Jul,2020
நிதி நிலைமை மிகவும் சவாலாக இருப்பதால், தனது செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடப்பதை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் ரூ.60 ஆயிரம் கோடி கடன் சுமையால் இருப்பதால், தொடர்ந்து இயங்க முடியவில்லை. இதனால், அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றால், ஏர் இந்தியா ஏலத்திற்கான கால அவகாசம் மூன்றாவது முறையாக ஆக.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச்சேவைகள். தற்போது படிப்படியாக துவங்கி உள்ளன. விமான சேவை நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்து செயல்பட்டு வந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்கள் ஜூலை 20 முதல் முழுவீச்சில் செயல்பட துவங்குமென அறிவித்தது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவிக்கும் நிலையில், தற்போதைய செலவுகளை குறைக்கும் வகையில், ஏர் இந்தியாவின் நிரந்தர ஊழியர்களுக்கு செயல் திறன், உடல் நலன் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஊதியமில்லா கட்டாய விடுப்பு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏர் இந்தியாவில் 9,426 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் 4,200 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே ஏர் இந்தியாவில் பணியாற்றி வரும் விமானிகளுக்கான முன்மொழியப்பட்ட மொத்த ஊதியத்தில் இருந்து கிட்டத்தட்ட 60 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் முதல் விமானிகளுக்கு சம்பளத்தில் 70 சதவீதம் வழங்கப்படவில்லை என்றும் இந்திய வணிக விமானிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.