சீன எல்லை அருகே பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுரங்கப்பாதை அமைக்க இந்தியா திட்டம்
14 Jul,2020
சீனாவுடன் பதற்றம் நிலவும் நிலையில் அந்நாட்டு எல்லை அருகே பிரம்மபுத்திரா நதியின் கீழ் சுமார் 14 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அசாமின் கோபூர் மற்றும் நுமாலிகார் நகரங்களை (Gohpur and Numaligarh) இணைக்கும் வகையில் நான்குவழி சுரங்கம் (four-lane tunnel) அமைக்க மார்ச்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இது சீனாவின் தாய்கு நதியின் கீழ் (Taihu Lake in Jiangsu province) 10 புள்ளி 79 கிலோ மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கபாதையைவிடவும் நீளமானது என்றும் கூறப்பட்டுள்ளது.
சுரங்க பாதையை 3 கட்டங்களாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதில் வென்டிலேட்டர், நடைபாதை, கழிவுநீர் பாதை அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
டிசம்பரில் தொடங்கப்படவுள்ள இத்திட்டத்தை செயற்படுத்த அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டுமான மேம்பாட்டு நிறுவனம் கைகோர்த்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.