இந்திய - சீன அதிகாரிகள் இன்று மீண்டும் பேச்சு
14 Jul,2020
எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவ அதிகாரிகளிடையே இன்று மீண்டும் பேச்சு நடக்கவுள்ளது.
காஷ்மீரின் லடாக் அருகே இந்திய - சீன எல்லையில் சமீபத்தில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் நம் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது.இதையடுத்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து எல்லையில் சர்ச்சைக்கு உரிய பகுதியிலிருந்து இரு நாட்டு ராணுவத்தினரும் பின் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.இதன்படி எல்லையில் இருந்து 600 மீட்டர் துாரம் வரை இருதரப்பும் பின்வாங்கினர்.
இந்நிலையில் இரு நாட்டு லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகளுக்கு இடையே அடுத்த கட்டமாக இன்று மீண்டும் பேச்சு நடக்கவுள்ளது.இதில் இருதரப்பும் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து எவ்வளவு துாரம் பின்வாங்கிச் செல்வது பதற்றத்தை குறைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே எல்லையில் எப் - 4 பகுதியிலிருந்து சீன ராணுவத்தினர் நேற்று பின்வாங்கிச் சென்றதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.