கொரோனா வைரஸ் : புதிய உச்சமாக ஒரேநாளில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு!தமிழகத்தில்
13 Jul,2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 79 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 500 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 187 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் 5 இலட்சத்து 54 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளதுடன், 3 இலட்சத்து ஆயிரத்து 850 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் 8 ஆயிரத்து 944 பேர் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கொரோனா உச்சம்: ஒரேநாளில் நான்காயிரத்தைக் கடந்தது வைரஸ் பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 244 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளன.
சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 77 ஆயிரத்து 338 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 32 பேர் மரணித்துள்ளனர்.
சென்னை நீங்கலான தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இன்று மொத்தமாக மூவாயிரத்து 76 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், மூவாயிரத்து 617 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இன்று அதிகபட்சமாக 42 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.