புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களின் வழக்கை நிறைவு செய்யுமாறு வைகோ கோரிக்கை!
09 Jul,2020
சென்னை புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மீதான வழக்கை நிறைவு செய்து அவர்கள் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். சைதாப்பேட்டை கிளைச் சிறை வெளிநாட்டினர் அடைக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்ட சிறை அல்ல. இது தமிழக அரசின் முதல் விதிமீறல் ஆகும்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கக் கோரும் 12 வழக்குகளில் கைது செய்யப்பட்ட 98 வெளிநாட்டு தப்லீக் ஜமா அத் அமைப்பினருக்குப் பிணை வழங்கப்பட்டது.
தடுப்பு அல்லது சிறப்பு முகாம்களுக்கு மத்திய அரசு வகுத்துள்ள அனைத்து வழிமுறைகளை எல்லாம் மீறும் வகையில் கடந்த 64 நாட்களுக்கு மேலாக வெளிநாட்டு இஸ்லாமியர்கள் புழல் சிறை வளாகத்திற்குள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜூன் 12 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சென்னை புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு இஸ்லாமியர்கள் மீதான வழக்கை முடித்து வைத்து, அவர்களை நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.