லடாக் எல்லை அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய- சீன வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால், இரு நாட்டு ராணுவப் படைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டன.
இந்திய எல்லையை ஒட்டி சீனா முகாம்கள், ஹெலிபேடுகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைத்தது. பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை எல்லை நோக்கி நகர்த்தியது. லடாக் அருகே உள்ள விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்பட்டன.
இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, சீனப் படைகள் கல்வான் மோதல் நடத்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குப் பின்னோக்கி சென்றன. மேலும், ஹாட்ஸ்பிரிங், கோக்ரா ஆகிய பகுதிகளிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இந்நிலையில், டிக்டாக், பேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, ஏஎன்ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தகவல்கள் கசிவதை தடுக்க பேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.