பூட்டான் நாட்டுக்கு சொந்தமான சாக்டெங் வனவிலங்குகள் சரணாலயத்தை சர்ச்சைக்குரியது என்று சீனா கூறி, டெல்லிக்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது சீனா. இந்த சரணாலயம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி பூட்டான் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது
கடந்த ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் உலக சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சீனா, பூட்டான், வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் சாக்டெங் வனவிலங்குகள் சரணாலயத்தை மேம்படுத்த நிதியுதவி வேண்டும் என்று பூட்டான் நாடு கோரிக்கை வைத்தது.
கடுப்பான பூட்டான் ஆனால், இந்தக் கோரிக்கையை சீனா நிராகரித்ததுடன், அந்த சரணாலயம் சர்ச்சைக்குரியது என்று தெரிவித்தது. இதனால், பூட்டான் அதிர்ச்சி அடைந்தது. உடனடியாக அங்கேயே எதிர்ப்பு தெரிவித்த பூட்டான் பிரதிநிதி, ''சாக்டெங் வனவிலங்குகள் சரணாலயம் பூட்டானுக்கு சொந்தமானது. பூட்டானின் ஒருங்கிணைந்த, இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாக அந்த சரணாலயம் இருக்கிறது. பூட்டனுக்கும், சீனாவுக்கும் இதுவரை நடந்த எல்லை தொடர்பான எந்தக் கூட்டத்திலும் சரணாலயத்தை சர்ச்சைக்குரிய பகுதி என்று சீனா கூறியது கிடையாது'' என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பாதிப்பு சீனா இவ்வாறு தெரிவித்து, இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த சரணாலயம் இந்தியாவின் அருணாசலப்பிரதேசத்தின் எல்லையை சுமார் 650 கி. மீட்டர் தொலைவிற்கு பகிர்ந்து கொள்கிறது. 2014ல் இந்த எல்லைப் பகுதியை தனது வரைபடத்தில் சீனாவுக்கு சொந்தமானது என்று காட்டி இருந்தது. பூட்டானின் கிழக்கில் டிராஷ்காங் மாவட்டத்தின் எல்லையில் இந்த சரணாலயம் இருக்கிறது.
கிழக்கில் சர்ச்சை இல்லை இந்த சரணாலயமும், டிராஷ்காங் மாவட்டமும் பூட்டானின் பகுதிகள் என்று 2014ல் வரையறுக்கப்பட்டுள்ளது. பூட்டானுக்கும், சீனாவுக்கு இடையே கிழக்கில் இருக்கும் பகுதிகள் எப்போது சர்ச்சைக்குள்ளானது இல்லை. பொதுவாக இந்த இருநாடுகளுக்கு மேற்கு மற்றும் மத்தியில் இருக்கும் பகுதிகள்தான் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே 1984ல் எல்லைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, சரணாலயம் தொடர்பாக சீனா எந்தவித சர்ச்சையையும் எழுப்பவில்லை. இதற்கு முன்பும் பூட்டான் பல்வேறு முறை சரணாலயத்திற்கு நிதியுதவி கோரியுள்ளது. அப்போதெல்லாம் சீனா எதிர்ப்பு தெரிவித்தது இல்லை என்று விவரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதன்முறையாக தற்போது சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கல்வான் தொடர்ந்து பூட்டான் எல்லையில் இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் சீனா சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. 1962ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்த போருக்குப் பின்னர் ஒரு முறை கூட கல்வான் தனக்கு சொந்தமானது என்று சீனா கோரவில்லை. ஆனால், தற்போது கல்வான் பகுதியை தனக்கு சொந்தமாக்க சீனா முயற்சித்து வருகிறது. ''இந்தியாவுக்கு சொந்தமான கல்வான் பகுதியை சீனா கோருவது மிகைப்படுத்தப்பட்டது, ஏற்றுக் கொள்ள முடியாதது'' என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார்.
ஐந்து விரல்கள் சீனா கடந்த 60ஆண்டுகளாக தனது எல்லையில் இருக்கும் இடங்களை ஆக்ரமிக்க துடித்து வருகிறது என்று திபெத் மத்திய நிர்வாக தலைவர் லாப்சாங் சாகய் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ''திபெத்தை பிடித்த பின்னர் சீன கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங் அளித்திருந்த பேட்டியில், திபெத் உள்ளங்கை போன்றது, இனி நாங்கள் இதை சுற்றி இருக்கும் ஐந்து விரல்களாக இருக்கும் இடங்களையும் ஆக்கிரமிப்போம் என்று அப்போதே தெரிவித்து இருந்தார். அந்த ஐந்து விரல்கள் லடாக், நேபாளம், பூட்டான், சிக்கிம் மற்றும் அருணாசலப்பிரதேசம்'' என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் தற்போது சீனா எவ்வாறு இந்தியாவை பதட்டத்துடன் வைத்திருக்க முடியுமோ அந்தளவிற்கு தந்திரங்களை எல்லையில் கையாண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சீனா எவ்வாறு இந்தியாவை பதட்டத்துடன் வைத்திருக்க முடியுமோ அந்தளவிற்கு தந்திரங்களை எல்லையில் கையாண்டு வருகிறது.