சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசாருக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாகி வரும் நிலையில், தன்னை ஏமாற்றிய நாகை மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் வீடியோ மூலம் வலியுறுத்தியுள்ளார். உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை பாயுமா?
நாகையில் காதலித்து கர்ப்பமாக்கி, கருவை கலைத்து ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அடுக்கடுக்கான ஆதாரங்களுடன், ஓராண்டாக உள்ளூர் காவல்நிலையம், எஸ்.பி. அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், நீதிமன்றம் என அலைந்து வருகிறார் ஒரு இளம் பெண். சாத்தான் குளம் விவகாரத்தில் தவறு செய்த போலீசார் மீது நடடிவக்கை எடுத்ததுபோல், தன்னை ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த இளம் பெண் கண்ணீர் மல்க கேட்டுள்ளார் .
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உதவி ஆய்வாளராக பணிபுரியும் தலைஞாயிறு ஓரடியம்புலத்தைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
முகநூலில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்தில் சிக்கல் இருக்காது என்று நினைத்த அந்த பெண், காவல் உதவி ஆய்வாளருடன் நெருங்கி பழகினார். அதனால் கருவுற்றார்.
இந்நிலையில், விவேக் ரவிராஜின் காதல் விவகாரம் அவர்களது வீட்டிற்கு தெரிய வந்தது. அவரது அக்கா மகளை திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவு செய்தனர். விவேக் ரவிராஜூம் அதற்கு சம்மதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கருவுற்ற விசயத்தை விவேக் ரவிராஜ் இடம் அந்த இளம் பெண் கூற அவர் திடுக்கிட்டுள்ளார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த விவேக் ரவிராஜ், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி, நைசாக பேசி கருவை கலைக்க வற்புறுத்தி உள்ளார்.
காதலரின் பேச்சை நம்பிய அந்த பெண்ணும் கருவை கலைக்க சம்மதித்துள்ளார். இதை அடுத்து சென்னையில் உள்ள தனது நண்பர்கள் ஹரி, பிரேம் மூலம் தனியார் மருத்துவமனையில் வைத்து கருக்கலைக்கப்பட்டுள்ளது.பின்னர், அந்த பெண்ணிடம் பேசுவதை விவேக் ரவிராஜ் தவிர்த்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியும், கெஞ்சியும் உள்ளார்.
காதலியின் கெஞ்சலுக்கு கொஞ்சமும் இரக்கம் காட்டாத அந்த காவல் உதவி ஆய்வாளர், இதை வெளியில் கூறினால் உன்னையும் உன் குடும்பத்தினரையும் கொன்று புதைத்து விடுவேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவும் வெளியானது. மேலும் திருமணம் செய்து கொள்ளும்படி கதறி அழும் அந்தப்பெண்ணை கொச்சை வார்த்தைகளால் ஒருமையில் பேசி மிரட்டலும் விடுத்தார்.
இளம் பெண்ணின் புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாகை எஸ்பி செல்வ நாகரத்தினத்திடம் எமது செய்தியாளர் விளக்கம் கேட்டபோது ஏற்கனவே அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் கூறினார். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்றார்போல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாகை எஸ்.பி. விளக்கமளித்தார்.
மேலும் படிக்க...
சாத்தான்குளம் கொலை வழக்கு: சிக்குகிறார்களா தன்னார்வலர் இளைஞர்கள்? விசாரணையில் புதிய திருப்பம்..
சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் மீது நடவடிக்கை பாய்ந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசாருக்கு எதிரான புகார் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்குமா?