தமிழகத்தின் சாத்தான்குளத்தில், வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பெனிக்ஸ், போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம், போலீஸ் சீர்திருத்தம் குறித்த பேச்சை மீண்டும் துவக்கியுள்ளது.
ஆனால், போலீஸ் துறையில் சீர்திருத்தங்கள் செய்வது குறித்து, பல கமிஷன்கள் அமைக்கப்பட்டும், பரிந்துரைகள் கொடுக்கப்பட்டும், அவை இதுவரை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை நிலவரம்.அமெரிக்காவில், ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்டு, போலீஸ் அத்துமீறலில் கொல்லப்பட்ட சம்பவம், உலகம் முழுதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. போலீஸ் அத்துமீறல் குறித்த விவாதம் பல நாடுகளில் துவங்கியது. கொரோனா வைரஸ், அதை அமுக்கிவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில், போலீஸ் காவலில் இருந்த இரண்டு வியாபாரிகள், போலீஸ் அத்துமீறலில் கொல்லப்பட்ட விவகாரம், தற்போது பூதாகரமாகி உள்ளது.இதையடுத்து, நாடு முழுதும், போலீஸ் சீர்திருத்தம் தொடர்பான விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்னும், இது போன்று பல்வேறு சம்பவங்களைத் தொடர்ந்து, போலீஸ் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக, பல கமிஷன்கள் அமைக்கப்பட்டன. அவை, பல பரிந்துரைகள் அளித்தும், இதுவரை அவை நிறைவேற்றப்படவில்லை.
காரணம் என்ன?
போலீஸ் துறை, மாநில அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. அதே நேரத்தில், போலீஸ் துறையின் தலைவராக இருப்பவர் உட்பட உயர் அதிகாரிகள், மத்திய அரசின், ஐ.பி.எஸ்., எனப்படும் இந்திய போலீஸ் சேவை பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால், கூட்டு முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாகும்.போலீஸ் துறை குறித்து நல்ல செய்திகளை விட, அவர்களை பற்றி தவறான செய்திகளே ஊடகங்களில் வெளி வருகின்றன அல்லது சுட்டிக் காட்டப்படுகின்றன. போலீஸ் சீர்திருத்தம் குறித்து, எப்போதும் எதிர்க்கட்சிகளே ஆவேசமாக பேசும். ஆனால், ஆளும் கட்சியினர் இது குறித்து பேச மாட்டார்கள்.
அதற்கு முக்கிய காரணம், அதிகாரம் மிக்க போலீஸ் துறை, தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என, ஆளுங்கட்சிகள் விரும்புகின்றன. தங்களுடைய அதிகாரத்தின் மிக முக்கிய அம்சமாக, போலீசையே பெரும்பாலான அரசுகள் பார்க்கின்றன.அதனால் தான், போலீஸ் நிர்வாகத்தின் வெளிப்படை தன்மை குறித்து, ஆட்சியில் இருக்கும்போது, எந்தக் கட்சியும் பேசுவதில்லை.போலீஸ் துறையில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக, 1978 - 1982ல் தாக்கல் செய்யப்பட்ட, தேசிய போலீஸ் கமிஷன்; 2000ம் ஆண்டில் அமைக்கப்பட்ட பத்மநாபய்யா கமிஷன்; 2002 - 2003ல் அமைக்கப்பட்ட, மலிமத் கமிஷன் முக்கியமானவை. இதைத் தவிர, போலீஸ் துறையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய, 1998ல், ரிபைரோ தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
7 பரிந்துரைகள்
இது ஒரு புறம் இருக்க, முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரி பிரகாஷ் சிங் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், சி.கே.தாக்கர், பி.கே.பாலசுப்பிரமணியம் அடங்கிய அமர்வு, 2006, செப்., 22ல், ஏழு முக்கிய பரிந்துரைகளை அளித்தது.மாநில அளவில் தேசிய பாதுகாப்பு கமிஷன் அமைக்க வேண்டும். தேசிய அளவில் பாதுகாப்பு கமிஷன் அமைக்க வேண்டும். மாநில, டி.ஜி.பி., பதவிக்கான தேர்வு முறை வெளிப்படையாக இருப்பதுடன், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே, ஒருவர் அந்தப் பதவியில் இருக்க வேண்டும்.அனைத்து நிலை அதிகாரிகளும், ஒரு இடத்தில் குறைந்தபட்ச பணிக்காலமே பணியாற்ற வேண்டும். வழக்கமான சட்டம் - ஒழுங்கு பிரச்னையில் இருந்து விசாரணையை பிரித்து, அதை தனியாக கையாள வேண்டும். போலீஸ் வாரியம் அமைக்க வேண்டும். போலீஸ் புகார் ஆணையத்தை அமைக்க வேண்டும்.இவ்வாறு, உச்ச நீதிமன்றம் கூறிய, ஏழு முக்கிய பரிந்துரைகளில், மிகவும் முக்கியமானது மற்றும் உடனடியாக செயல்படுத்தக் கூடியது, விசாரணை முறையை தனியாக பிரிப்பது தான். கடந்த, 2015ல், ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் இதை மீண்டும் வலியுறுத்தியது.'வழக்கமான பணிகளுடன், விசாரணையையும் செய்வதால், போலீசார் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. அதனால், பல குற்றவாளிகள் தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என, உச்ச நீதிமன்றம் அப்போது கூறியது.
வலுவில்லாத விசாரணை
நாட்டில் பதிவாகும் வழக்குகளில், 50 சதவீத வழக்குகள் மற்றும் 80 சதவீத பாலியல் தொடர்பான வழக்குகளில், குற்றவாளிகள் தப்பி விடுவதாக, ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், வலுவில்லாத விசாரணையே ஒரு முக்கிய காரணம். இதனால் தான், நீதித் துறை, போலீஸ் துறை மீது, மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடுகிறது. அதே நேரத்தில், குற்றவாளிகளும் தைரியமாக உள்ளனர்.போலீஸ் துறையில் மாற்றங்கள் செய்யும் வகையில், மாதிரி போலீஸ் சட்டத்தை, மத்திய அரசு, 2006ல் அறிமுகம் செய்தது. அதே ஆண்டில், 17 மாநிலங்கள் இதை அமல்படுத்தின. அதன்படி, மாநில அளவில், ஐந்து பேர் கொண்ட ஒரு ஆணையம் அமைக்க வேண்டும். வெளிமாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற, போலீஸ் டி.ஜி.பி., ஒருவர்; ஓய்வுபெற்ற, வெளிமாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர்; ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் ஒருவரும் இதில் இடம் பெற வேண்டும்.
ஆனால், இது என்னவாயிற்று என்பது தற்போது தெரியவில்லை.புகார்கள் மீதான விசாரணையை, வழக்கமான சட்டம் - ஒழுங்கில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்கு, பல முக்கிய காரணங்கள் உள்ளன. முக்கிய காரணம், போலீசாருக்கு கூடுதல் வேலை பளு ஏற்படுகிறது. அதை குறைத்தாலே, 'லாக்கப்' மரணங்கள், மூர்க்கத்தனமாக தாக்குவது போன்றவை குறையும்.கடந்த, 2017 நிலவரப்படி, நம் நாட்டில், ஒரு லட்சம் மக்களுக்கு, 131 போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவு, 181. இதுவே, ஐ.நா.,வின் பரிந்துரைப்படி, 222 அதிகாரிகள் இருக்க வேண்டும். போதிய ஆட்கள் இல்லாததால், இருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு வேலைப்பளு அதிகம் உள்ளது. இதனால், அவர்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலை உள்ளது.
பெரிய மனக் குறை
அடுத்ததாக, மோசமான பணியிடம், குறைந்த சம்பளம், போதிய ஊக்குவிப்பு இல்லாதது, போலீசாருக்கு உள்ள மிகப் பெரிய மனக் குறையாகும்.நாடு முழுதும், போலீஸ் துறையில் உள்ளவர்களில், 86 சதவீதம் பேர், கான்ஸ்டபிளாக உள்ளனர். பதவி உயர்வுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதிகபட்சம், ஓய்வு பெறும்போது, ஹெட் கான்ஸ்டபிளாக முடியும். காவல் துறைக்கான, பட்ஜெட் ஒதுக்கீடும் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது. மக்களுடனான நல்ல தொடர்புக்கு வாய்ப்பும் இல்லை.இது போன்ற குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், போலீஸ் சீர்திருத்தம் அமைய வேண்டும். நாட்டில், பொருளாதார சீர்திருத்தம் மேற்கொள்ளும்போது, இதுவும் சாத்தியமே.
எப்படி தப்பிக்கின்றனர்?
கடந்த, 2001 - 2018 கால கட்டத்தில், நாட்டில், 1,727 மரணங்கள், போலீஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ளன. இவர்கள், போலீஸ் மற்றும் நீதிமன்றக் காவலில் இருந்தவர்கள். இந்த வழக்குகளில், 26 போலீசார் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அதாவது, மொத்த வழக்குகளில், 2 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.இதற்கு முக்கிய காரணம், போலீஸ் காவலில் இருந்தபோது, அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது நிரூபிக்கப்படாததே. உதாரணமாக, 2018ல் பதிவு செய்யப்பட்ட, லாக்கப் மரணங்களில், 4.3 சதவீதம் மட்டுமே, போலீசாரால் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விபரங்களின்படி, போலீஸ் அடித்து உயிரிழப்பது குறைந்துள்ளது. கடந்த, 2017ல், பதிவான, 100 வழக்குகளில், 5 சதவீதம் மட்டுமே, போலீஸ் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதுவே, 2017ல் பதிவான, 92 வழக்குகளில், 8.7 சதவீத வழக்குகளில், போலீஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. கடந்த, 2015ல், 6.2 சவீதமாகவும், 2014ல், 9.7 சதவீதமாகவும் இது இருந்தது.கடந்த, 2000 - 2018 காலகட்டத்தில், 2,000 மனித உரிமை மீறல் வழக்குகள், போலீஸ் மீது பதிவு செய்யப்பட்டன. அதில், 737 வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டது. அதில், 344 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.கடந்த, 2017ல் பதிவான, 100 லாக்கப் மரணங்களில், 37 வழக்குகளில் விசாரணை கைதிகள் தற்கொலை செய்தனர்; உடல்நலக் குறைவால், 28 பேர் இறந்தனர் என, பதிவு செய்யப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர்