ஜூலை 31-ம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு!
04 Jul,2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல், நேற்று ஒருநாளில் மட்டும் 379 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 3,79, 892 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,27,439 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக அன்லாக் 2 திட்டம் அமலில் உள்ளதால் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, விமான சேவை படிப்படியாக அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் கடுமையான பாதுகாப்பு மற்றும் சமூக வழிகாட்டுதல் விதிமுறையின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.