இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது உலகளாவிய படை பலத்தை அதிகரிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அந்த நாட்டு வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறியுள்ளார்.
லடாக் எல்லையில் கடந்த மாதம் திடீரென ஊடுருவிய சீன ராணுவம் இந்திய படைகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இதில் கடந்த 15-ந்தேதி நடந்த இருதரப்பு மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாட்டு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நடந்த இந்த மிகப்பெரிய மோதல் உலக அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் இந்த அத்துமீறல்களை கட்டுப்படுத்தவும், சீனாவால் அச்சுறுத்தலக்கு ஆளாகும் நாடுகளுக்கு ஆதரவாக படைகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
‘பிரசல்ஸ் 2020 மன்றம்’ நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ மெய்நிகர் முறையில் உரையாற்றும்போது இது தொடர்பாக கூறியதாவது:-
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா தனது ராணுவம் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை பெருக்கி வருகிறது. இது பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும், அதை தாண்டியும் கவலை கொள்ளச்செய்து வருகிறது. தென் சீனக்கடல், கிழக்கு சீனக்கடல் பகுதியில் ராணுவ கட்டுமானங்களை அமைப்பதுடன், பிராந்திய சர்ச்சைகளிலும் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் இன்று எனது செய்தி இதுதான். நமது சுதந்திரமான சமூகங்கள், நமது வளர்ச்சி, நமது எதிர்காலத்துக்காக சீன சவாலுக்கு எதிராக நாம் இணைந்து உழைக்க வேண்டும். இது அவ்வளவு எளிதானது அல்ல.
இது பலரை தூண்டச்செய்யும், குறிப்பாக சீனாவில் பணம் சம்பாதிக்கும் நமது வர்த்தக சமூகத்தினருக்கு அதிர்ச்சியை கொடுக்கும். காரணம், சீன கம்யூனிஸ்டு கட்சியின் போர்க்குண பெருக்கத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். இது முட்டாள்தனமானது. இதை நான் ஏற்கமாட்டேன்.
சுதந்திரத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையே எந்த சமரசமும் கூடாது. எதிர்காலத்தை சீன கம்யூனிஸ்டு கட்சி வடிவமைப்பதை நான் விரும்பவில்லை. அந்த கட்சியின் அச்சுறுத்தலை பற்றியே பேசுகிறேன். தற்போது சீனாவால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல், வியட்நாமுக்கு அச்சுறுத்தல், மலேசியா, இந்தோனேஷியா, தென்சீனக்கடல் பகுதி முழுவதும் சவால்கள் இருக்கின்றன.
எனவே சீன ராணுவத்தை எதிர்க்கும் வகையில் எங்கள் உலகளாவிய படைகள் வலிமையாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய உள்ளோம். நமது காலத்தின் இந்த சவாலை எதிர்கொள்வதற்கு நமது படைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்யப்போகிறோம்.
இந்த பணிகளை ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வழிகாட்டலின் படி மேற்கொள்கிறோம். இந்த படை பெருக்கத்துக்காக ஜெர்மனியில் இருக்கும் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை சுமார் 52 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை குறைத்து வருகிறோம்.
இவ்வாறு மைக் பாம்பியோ கூறினார்