இந்தியாவில் முதல் கிளையை திறக்கும் பேங்க் ஆஃப் சைனா
24 Jun,2020
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் இரு நாடுகளுக்கிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் பேங்க் ஆஃப் சைனா இந்தியாவில் தனது முதல் கிளையை திறக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது. இது மும்பையில் திறக்கப்பட இருப்பதாகவும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி போன்று காட்சியளிக்கும் படத்தில் பேங்க் ஆஃப் சைனா தனது கிளையை இந்தியாவில் துவங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது பிரதமர் மோடி சீன அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியின்பேரில் நடைபெறுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரல் தகவல்களை ஆய்வு செய்ததில் பழைய செய்தி ஒன்று தேதி மாற்றப்பட்டு தற்போதைய பதற்ற நிலையில், மேலும் பரபரப்பை அதிகரிக்கும் நோக்கில் வைரலாக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
மும்பையில் பேங்க் ஆஃப் சைனா கிளை கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் திறக்கப்பட்டது. இதுசார்ந்து வெளியான செய்தியின் தேதி மாற்றப்பட்டு தற்சமயம் வைரலாகி வருகிறது. பேங்க் ஆஃப் சைனா இந்தியாவில் செயல்பட மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு அனுமதி அளித்தது. அந்த வகையில் வைரல் தகவல்களில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.