முருகனை, நளினி சந்தித்து பேசுவதற்கு அனுமதி மறுப்பது ஏன் – உயர்நீதிமன்றம் கேள்வி!
23 Jun,2020
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகனை அவரது மனைவி நளினி சந்தித்து பேசுவதற்கு சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து ஒருவாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து நளினியின் தாய் பத்மா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகளான சுந்தரேஷ், கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 7 பேரை விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு சிறைவிதிகளின் படி இருவரையும் சந்தித்துப் பேசக் கூட அனுமதி மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாகச் சிறையில் உள்ள நளினி, முருகன் தம்பதிக்குச் சிறை விதிகளின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும்.
கடந்த மூன்று மாதங்களாக நளினியையும், முருகனையும் சந்தித்துப் பேசச் சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் காணொளி காட்சி மூலம் பேசுவதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முருகன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக முருகனின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக இந்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.