சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரம் –
21 Jun,2020
லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இவர் நாளை ரஷ்யா செல்லவுள்ள நிலையில் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து கருத்து வெளியிட்ட அவர், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை சமாளிக்க இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகள் தயாராக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எல்லையில் சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு இராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 75ஆம் ஆண்டு வெற்றி தினம் ஜூன் 24ஆம் திகதி மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது.
இதில் கலந்துகொள்வதற்காகவே அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அரசுப் பயணமாக நாளை மாஸ்கோ புறப்படுகிறார்.
இந்திய – சீனா போர் பதற்றத்திற்கு மத்தியில் அவரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கும் ஆவேசமான போக்கிற்கும் தகுந்த பதிலடி கொடுக்க இந்திய இராணுவத்துக்கு முழுமையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால், 3,500 கி.மீ. எல்லைப் பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன