லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதல் காரணமாக இந்தியா-சீனா இடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்தியா-சீன வீரர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக சீன வெளியுறத்துறை அமைச்சத்தின் செய்தித்தொடர்பாளர் லீ ஜீயன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியது தொடர்பாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீன வெளியுறத்துறை அமைச்சத்தின் செய்தித்தொடர்பாளர் லீ ஜீயன் பேசியதாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் உள்ளதாவது:-
கால்வான் பள்ளத்தாக்கு உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்.ஓ.சி.) சீனப் பக்கத்தில் அமைந்துள்ளது. சீன பாதுகாப்பு படையினர் பல ஆண்டுகளாக அங்கு பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில்
ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்திய எல்லை படையினர் தன்னிச்சையாக தொடர்ந்து கால்வான் பள்ளத்தாக்கின் உண்மையான கட்டுப்பட்டுக் கோட்டில் சாலைகள் மற்றும் பிற கட்டமைப்புகளை அமைத்து வந்தனர்.
இதற்க்கு சீனா பல முறை எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்தியா அதை பொருட்படுத்தாமல் எல்லையை கடந்து ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது.
மே 6 ஆம் தேதி இரவு நேரத்தில் இந்திய படைகள் எல்லையை தாண்டி அத்துமீறி சீன எல்லைக்குள் நுழைந்து தடுப்புகளை அமைத்து சீன படையினர் ரோந்து பணி மேற்கொள்ள தடையாக இருந்தனர்.
இந்த நிலைமையை தணிக்க இந்தியா-சீனா இடையே ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
சீனாவின் வலுவான உரிமைக்கோரல் மூலமாக எல்லையை தாண்டிய
இந்திய வீரர்களை திரும்பப்பெற சம்பதம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய தரப்பு வீரர்கள் தாங்கள் அமைத்த தடுப்புகளை அழித்தும் எல்லையை விட்டு திரும்பியும் சென்றனர்.
ஜூன் 6 ஆம் தேதி இரு தரப்பு ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவிக்கப்பட்டது. கல்வான் ஆற்றை கடந்து ரோந்து மற்றும் கட்டமைப்புகளை அமைக்கமாட்டோம் என இந்தியா உறுதி அளித்தது.
நிலைமை சீராக இருந்த போது அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜூன் 15 ஆம் தேதி இந்தியாவின் முன் கள வீரர்கள் ஒப்பந்தத்தை மீறி உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை மீறி வேண்டுமென்றே ஆத்திரமூட்டினர்.
மேலும், சமாதானம் பேசச்சென்ற சீன அதிகாரிகள் மற்றும் வீரர்களையும் இந்திய வீரர்கள் தாக்கினர். இந்த அடிதடி தாக்குதலில் சிலர் காயமடைந்தனர்.
எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலைப்பாட்டை இந்திய வீரர்கள் வேண்டுமேன்றே ஒருதலைப்பட்சமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டனர். அந்த நிலைமையை கட்டுப்படுத்தவே சீன வீரர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தள்ளப்பட்டனர்.
இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் எல்லைப் பகுதிகளின் நிலைத்தன்மையை தீவிரமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. எல்லை விவகாரத்தில் இரு நாடு ஒப்பந்தத்தை மீறியது சீன வீரர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது தொடர்பாக சீனா தனது எதிர்ப்பை இந்தியாவிடம் தெரிவித்தது.
இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் டெலிபோன் மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், இந்திய முன் கள வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது போன்ற நிகழ்வு மீண்டும் நடைபெறக்கூடாது எனவும் இந்திய மந்திரி ஜெய்சங்கரிடம் சீன மந்திரி தெரிவித்தார்.
கள நிலைமை தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும். தற்போதைய நிலைமையை தணித்து அமைதியை நிலைநாட்ட ராணுவம் மற்றும்
ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ப்படும். சீனாவுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என நம்புகிறோம்.
என சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.