கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு போராடிக் கொண்டு இருக்கிறது.
என்னதான் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்தாலும் நோய்த் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1,415 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்ந்து நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 896 ஆக உயர்ந்து இருக்கிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 38 பேர் பலி ஆனார்கள். இவர்களில் ஒரு நர்ஸ் உள்பட 31 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் உயிரிழந்து உள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனா சாவு எண்ணிக்கை 435 ஆக அதிகரித்து இருக்கிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 23 பேரும் அடங்குவார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 661 ஆக உயர்ந்து உள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 1,170 பேர் ஆண்கள், 804 பேர் பெண்கள் ஆவர். இதுவரை 27 ஆயிரத்து 520 ஆண்களும், 17 ஆயிரத்து 124 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 17 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,138 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 24 ஆயிரத்து 547 பேர் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி 19 ஆயிரத்து 676 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று 38 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் சிகிச்சை பெற்றவர்கள். உயிரிழந்தவர்களில் விருதுநகரைச் சேர்ந்த 34 வயது ஆண், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் உயிரிழந்து உள்ளார். மேலும் சென்னையில் 13 பெண்கள் உள்பட 31 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் கொரோனா உயிரிழப்பு 435 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 23 மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 30 மாவட்டங்களில் புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் சென்னையை சேர்ந்த 1,415 பேரும், செங்கல்பட்டை சேர்ந்த 178 பேரும், திருவள்ளூரில் 81 பேரும், திருவண்ணாமலையில் 35 பேரும், காஞ்சீபுரத்தில் 32 பேரும், ராமநாதபுரத்தில் 23 பேரும், நெல்லையில் 21 பேரும், விழுப்புரம், தென்காசி, மதுரையில் தலா 16 பேரும், சிவகங்கையில் 15 பேரும், கள்ளக்குறிச்சியில் 14 பேரும், திண்டுக்கலில் 11 பேரும், சேலத்தில் 10 பேரும், வேலூர், திருச்சியில் தலா 9 பேரும், திருவாரூர், தேனியில் தலா 8 பேரும், நாகப்பட்டினம், விருதுநகரில் தலா 7 பேரும், ராணிப்பேட்டையில் 6 பேரும், தஞ்சாவூரில் 4 பேரும், கோவையில் 3 பேரும், கன்னியாகுமரி திருப்பத்தூரில் தலா 2 பேரும், திருப்பூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, தர்மபுரியில் தலா ஒருவரும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 782 தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரத்து 599 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட இருக்கிறது. இதில் 6 லட்சத்து 65 ஆயிரத்து 401 பேருக்கு பாதிப்பு இல்லை என்றும், 537 பேரின் மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் தெரியவந்து உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 76 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 326 முதியவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 270 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 139 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 200 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 85 பேரும், ரெயில் மூலம் வந்த 309 பேரும், சாலை மார்க்கமாக வந்த 1,507 பேரும், கப்பல் மூலம் துறைமுகம் வந்த 5 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது