இந்தியாவில் கொரோனாவால் பெண்களே அதிகளவில் உயிரிழக்கக்கூடும் – ஆய்வு தகவல் தெரிவிப்பு!
14 Jun,2020
கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அபாயம் இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் இருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவினால் பலியாவதற்கான அபாயம் ஆண்களுக்கே அதிகம் இருப்பதாக உலக அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அறிவியல் என்ற ஆராய்ச்சி இதழில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் வீதத்தை வயது மற்றும் பாலின அடிப்படையில் வகைப்படுத்தி ஆராய்ச்சியாளா்கள் குழு ஒன்று இதனை மதிப்பீடு செய்துள்ளது.
இந்தியாவில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வின்படி “கொரோனா நோய்த்தொற்றால் ஆண்கள் உயிரிழப்பதற்கான அபாயம் 2.9 சதவீதமாக உள்ள நிலையில் பெண்கள் உயிரிழப்பதற்கான அபாயம் 3.3 சதவீதமாக உள்ளது. எனினும் முதியவா்களாக இருக்கும் பட்சத்தில் பாலின பேதமின்றி இருவருக்குமான உயிரிழப்பு அபாயம் அதிகமாகவே உள்ளது.
இதன்படி 5 வயதுக்கு உட்பட்டவா்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட முதிா்ந்தவா்கள் இடையேயான நோய்த்தொற்று பாதிப்பு அளவு ஏறத்தாழ சமமாகவே உள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 3.34 சதவீதமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்ட நிலையில் அதன் திருத்தப்பட்ட மதிப்பீடானது 4.8 சதவீதமாக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.