சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்... நேபாள எல்லையில் நடந்தது என்ன?
14 Jun,2020
இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே 1800 கி.மீ. நீள எல்லை உள்ளது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் லிபுலேக் என்ற கணவாய் இருக்கிறது. அதையொட்டி லிம்பியாதுரா, காலாபானி ஆகிய இடங்களும் அமைந்துள்ளன. இவை இந்தியாவுக்கு சொந்தமான பகுதியாகும். ஆனால் இந்த இடங்களை உள்ளடக்கி நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்த 3 பகுதிகளையும் நேபாள பகுதியாக காட்டி உள்ளனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்திய-நேபாள எல்லை பகுதியான சீதாமர்கி (பீகார்) அருகே நேபாள நாட்டை சேர்ந்த ஆயுத காவல் படையினர் நேற்று நடத்திய நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோதமாக இந்தியர்கள் சிலர் எல்லையைக் கடக்க முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகின. அத்துடன், இந்தியா-நேபாளம் இடையே தற்போது வெடித்துள்ள எல்லைப் பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகின.
ஆனால், இது உள்ளூர் பிரச்சனை என்றும், இதற்கும் எல்லைப் பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை என்றும் இரு நாடுகளின் மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சம்பவம் நடந்த எல்லைப் பகுதியில் வேலி கிடையாது. இந்திய பகுதியைச் சேர்ந்த லகன் யாதவ் என்பவர், நேபாள பகுதியில் உள்ள தனது மருமகளை பார்ப்பதற்காக எல்லையை தாண்டி வந்ததால் பிரச்சினை ஏற்பட்டதாக நேபாள ஆயுதப்படை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லையை தாண்டி சுமார் 75 மீட்டர் தொலைவில் உள்ள நேபாள பகுதிக்கு வந்த லகன் மற்றும் சில பெண்கள், லகனின் மருமகளுடன் பேசுவதைப் பார்த்த நேபாள படையினர், அவர்களை திரும்பி போகும்படி கூறி உள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் முதலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், கலைந்து செல்லாததால் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயமடைந்துள்ளனர். லகன் யாதவை நேபாள போலீசார் பிடித்துச் சென்றனர். பின்னர் இன்று காலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய-நேபாள எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்கள் உறவுகளைப் பேணுகிறார்கள். அவர்களின் குடும்பங்கள் இரு புறமும் உள்ளன. எல்லையில் வேலி இல்லாததால், குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக அவ்வப்போது செல்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், நேபாள போலீசில் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்திய பகுதிக்கு திரும்பிய லகன் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியதால் இந்திய பகுதிக்கு ஓடி வந்தபின்னர், தன்னை நேபாள போலீசார் இழுத்துச் சென்று தாக்கியதாகவும், நேபாள பகுதியில் இருந்து அழைத்து வந்ததாக ஒப்புக்கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் கூறினார்.