இந்தியாவில் 2.86 லட்சம் கொரோனா: பலி 8 ஆயிரத்தை தாண்டியது தமிழகத்தில் 38,716 பேர் பாதிப்பு
12 Jun,2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.86 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 8 ஆயிரத்தை தாண்டியது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 86 ஆயிரத்து 579 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 029 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 357 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 102ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் 1,875 பேருக்கு கொரோனா; இதுவரை 38,716 பேர் பாதிப்பு
தமிழகத்தில் இன்று (ஜூன் 11) ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆகவும், பலி எண்ணிக்கை 349 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 38 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 38,716 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 77 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 16,829 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 6,55,675 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 2 பேரும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய உயிரிழப்புகளில் 21 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 1,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,659 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,999 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 32,422 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 4,295 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது