சீனாவில் உருவான உயிர்க்கொல்லி வைரசான கொரோனா, இந்தியாவில் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த 5-கட்டங்களாக தொடர்ந்து 98 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
ஆனால் இவை அனைத்தையும் முறியடித்துவிட்டு, கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. தினந்தோறும் இந்த வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி புதிதாக 9,887 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுடன், 294 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் 45,24,317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,37,938 பேருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் மட்டும் புதிதாக 139 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் 58 பேரும், குஜராத்தில் 35 பேரும், தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 12 பேரும், மேற்குவங்காளத்தில் 11 பேரும், தெலுங்கானாவில் 8 பேரும், மத்தியபிரதேசத்தில் 7 பேரும், ராஜஸ்தானில் 5 பேரும், ஆந்திராவில் 2 பேரும், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் 24 மணி நேரத்துக்குள் கொரோனாவால் பலியாகி இருக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,642 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரசின் கோரப்பிடியில் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் சிக்கி உள்ளன. புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுடன் சேர்த்து இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,36,657 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த இந்தியா, இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு தற்போது 6-வது இடத்துக்கு சென்றுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. எனினும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,14,072 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் 5 இடங்களில் முறையே அமெரிக்கா, பிரேசில், ரஷியா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் கொரோனா 80,229 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. அங்கு இந்த வைரசுக்கு 2,849 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு 30,152 ஆகவும், பலி 251 ஆகவும் உள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் 26,334 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கிய கொரோனா, 708 பேரின் உயிரை பறித்துள்ளது. பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 19,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு 1,190 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 218 ஆக உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பாதிப்பு 9,733 ஆகவும், பலி 257 ஆகவும் இருக்கிறது. மத்தியபிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. அங்கு 384 பேர் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. மேற்குவங்காளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,303 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 366 ஆகவும் உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கு கீழே இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, மற்றும் ஆந்திராவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் கர்நாடகாவில் புதிதாக 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,835 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா அங்கு பேரின் 57 பேரின் உயிரையும் பறித்துள்ளது.
ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,303 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73 ஆகவும் இருக்கிறது. கேரளாவில் புதிதாக 111 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் அங்கு பாதிப்பு 1,699 ஆகவும், பலி 14 ஆகவும் உள்ளது. தெலுங்கானாவில் கொரோனாவுக்கு 113 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,290 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். புதுச்சேரியில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ நெருங்கி உள்ளது.