தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஜூன் மாதம் கடந்த 6 நாட்களுக்குள் 7 ஆயிரத்து 819 பேர் கொரோனா பிடியில் சிக்கி உள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 1,077 முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உயிர் பலியும் அதிகரித்து வருகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் 78 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு மொத்தம் 1,458 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 152 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 874 ஆண்களும், 584 பெண்களுக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 19 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள். இதில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 10 பேரும், அரசு மருத்துவமனைகளில் 9 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 251 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 633 பேர் நேற்று குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 16 ஆயிரத்து 395 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழக மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்று 29 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,149 பேரும், செங்கல்பட்டில் 95 பேரும், திருவள்ளூரில் 80 பேரும், காஞ்சீபுரத்தில் 16 பேரும், தூத்துக்குடியில் 14 பேரும், கன்னியாகுமரியில் 10 பேரும், கிருஷ்ணகிரியில் 8 பேரும், மதுரையில் 7 பேரும், நாகப்பட்டினம், விழுப்புரம், கரூரில் தலா 6 பேரும், அரியலூர், திண்டுக்கலில் தலா 5 பேரும், ராமநாதபுரம், திருவாரூர், விருதுநகரில் தலா 4 பேரும், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கோவையில் தலா 3 பேரும், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், நெல்லை, வேலூரில் தலா 2 பேரும், புதுக்கோட்டை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 67 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 217 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி உள்ளனர். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 1,638 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 129 முதியவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சீபுரத்தில் தொற்று 500-ஐ தொட்டது: சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் உள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக 16 பேர் கொரோனா பிடியில் சிக்கினர். இதன் மூலம் காஞ்சீபுரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 500-ஐ தொட்டது. 309 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி 187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.