கடலில் 3 மாதங்களாக சிக்கித்தவிக்கும் தமிழர்கள் உள்பட 48 இந்தியர்கள் - மத்திய அரசுக்கு கோரிக்கை
04 Jun,2020
ஸ்காட்லாந்து கடலில் கப்பலில் 3 மாதங்களாக 5 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்கள் தவித்து வருகின்றனர். தங்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த ஃபிரெட் என்ற சொகுசு கப்பல் நிறுவனத்தில் 5 தமிழர்கள் உள்பட 48 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கப்பல் நிறுவனம் மூடப்பட்டதால், தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 48 இந்தியர்களும், ஃபிரெட் நிறுவனத்திற்கு சொந்தமான பால்மோரல் சொகுசுக் கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கப்பல் தற்போது ஸ்காட்லாந்து கடலில் 3 மாதங்களாக நிற்பதால், ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களுக்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தால், அதற்கான செலவை தங்களது நிறுவனமே ஏற்கத் தயாராக இருப்பதாகவும், நடுக்கடலில் தவித்து வரும் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.