சுமார் 68 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் அரச பேருந்துகள் சேவையில்
01 Jun,2020
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 5ஆம் கட்ட பொது முடக்கம் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் பல தளர்வுகளுடன், ஜூன் 30ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை அறிவித்தார்.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் சேவையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டது.
மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தும் முகமாக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24ஆம் திகதிக்கு பின்னர், தமிழகத்தில் சுமார் 68 நாட்களுக்கு பின்னர் இன்று அரசு பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.