தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை!சென்னையில் அதிக கட்டுப்பாடுகள்
30 May,2020
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் மூத்த விஞ்ஞானியான பிரதீர் கவுர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதிக மக்கள் இருப்பதால் நகரப்பகுதியில் இந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது. பரிசோதனை எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
எண்ணிக்கையை உயர்த்தினால்தான் நோய்த்தொற்றை கண்டறிய முடியும். எனவே தொற்று அதிகரிப்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்
கொரோனா பரவலை தடுக்க சென்னையில் அதிக கட்டுப்பாடுகள் – விஜய பாஸ்கர் அறிவிப்பு!
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க எதிர்வரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 1400 படுக்கைகளுடன் தயாரான கொரோனா வார்டை சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு புளியந்தோப்பில் சிகிச்சை அளிக்கப்படும்.
ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவில் உள்ளது. கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது. கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
கொரோனா நோயாளிகளிடம் வேறுபாடு காட்டாதீர்கள். 140 சுகாதார மையங்களில் காய்ச்சலை அறிய சோதனை செய்யப்படும். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க இனிவரும் நாட்களில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.