நரேந்திர மோதியிடம் கோரிக்கை வைக்கும் பாகிஸ்தானியர்: ‘என் புறாவை திருப்பித் தாருங்கள்’
29 May,2020
இந்தியாவில் உளவு பார்த்ததாக கூறி பிடித்து அடைத்து வைக்கப்பட்டுள்ள புறா ஒன்று தன்னுடையது என்றும் அதை தம்மிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானிய கிராமவாசி ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஹபிபுல்லா எனும் அவர் வசிக்கும் கிராமம் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் இருந்து, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஈகைத் திருநாளான ரம்ஜான் கொண்டாடும் நோக்கிலேயே தாம் தனது புறாக்களை பறக்க விட்டதாக ஹபிபுல்லா கூறியுள்ளார் என்று பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் எனும் செய்தித்தாள் கூறுகிறது.
இந்தப் புறா தமது செல்லப் பிராணி என்றும் அது உளவாளியோ தீவிரவாதியோ அல்ல என்றும் ஹபிபுல்லா அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்களன்று எல்லையோர கிராமவாசிகள் சிலர் அந்த புறாவை பிடித்தனர். பின்னர் அந்த புறாவை இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரின் காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
அதை காவல்துறையினர் இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைத்தனர்.
அந்தப் புறாவின் காலில் ஒரு வளையம் மாற்றப்பட்டிருந்தது என்றும் அதில் சில குறியீடுகள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
அந்தக் குறியீடுகளின் பொருள் என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் காஷ்மீர் காவல்துறை கூறுகிறது.
ஆனால் அந்த வளையத்தில் எழுதப்பட்டுள்ளது குறியீடு ஒன்றுமில்லை என்றும் அது தனது செல்பேசி எண் என்றும் கூறுகிறார் ஹபிபுல்லா.
இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையில் புறாக்களின் பங்கு
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் புறாக்கள் சிக்கிக் கொண்டிருப்பது இது முதல்முறை அல்ல.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் ஒரு வெள்ளை புறா இருப்பதை 14 வயது சிறுவன் ஒருவன் கண்ட பின்பு, 2015ஆம் ஆண்டு மே மாதம் இந்தியப் படையினரால் அந்த புறா கைப்பற்றப்பட்டது.
அதேபோல அக்டோபர் 2016இல் வேறு ஒரு புறாவை இந்திய காவல் படையினர் கைப்பற்றினர்.
பதான்கோட் பகுதியில் கைப்பற்றப்பட்ட அந்த புறாவின் காலில் உருது மொழியில் எழுதப்பட்டிருந்த குறிப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது.
அதில் இந்தியாவுக்கு எதிராக போரிட ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருப்பதாகவும், 1971ஆம் ஆண்டில் இருந்த அதே மக்கள் இப்போது இல்லை என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.