இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதையடுத்து அதை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் மாதம் 24-ந்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.
ஆனால் ஊடரங்கு அமலுக்கு வந்து 2 மாதம் கடந்துவிட்ட நிலையிலும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து நோய் பரவுதல் அதிகரித்து வருகிறது.
தற்போது 1 லட்சத்து 51 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 337 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் நோய் தாக்குதல் இருமடங்காக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த 16 நாட்களில் இறப்பு விகிதம் 2 மடங்காகி இருக்கிறது.
பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்து நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
நிலைமை இப்படி இருப்பதால் ஊரடங்கை உடனடியாக வாபஸ்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 5-வது கட்டமாக ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து பிரதமர் அலுவலகம் விரிவாக ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே மே 12 முதல் 15 ரெயில்கள் (எதிர் தடத்தில் 15 ரெயில்கள்) இயக்கப்பட்டன. இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, உள்நாட்டு பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம், குஜராத், தமிழகம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் விமானங்கள், ரெயில்கள் மற்றும் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் புதன்கிழமை மதிய நிலவரப்படி, அதற்கு முந்தைய 19 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 122 பேரில் 108 பேர் மராட்டியத்தில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரசுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும் பணிகளும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைளும் ஒருசேர நடைபெற வேண்டும். கொரோனா பரிசோதனைக்காக சளியை சேகரிக்கும் மையங்கள் நகரில் 15 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
நாட்டிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு முன்மாதிரி நகரம் என்று மத்திய அரசே அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.