ஹிமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு நீடிப்பு!தமிழகத்தில் அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று
26 May,2020
ஹிமாச்சல பிரதேசத்தில் ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பினை நேற்று (திங்கட்கிழமை) அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் இதுவரை 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் 63 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ஹமிர்பூரில் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் சமூக பரவலாக மாறி விடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாகவே ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 88 வீதமானோருக்கு அறிகுறிகள் இல்லாமலே கொரோனா தொற்று – விஜயபாஸ்கர்
தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆயிரத்தை கடந்துள்ளது.
இதில் 88 சதவீதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலைமை குறித்து நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “மாநிலத்தில் மேலும் 805 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 93 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தந்தவர்களாவர்.
இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17ஆயிரத்து 82-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேர் பாதிக்கப்பட்டால் ஒட்டுமொத்த பாதிப்பு 11 ஆயிரத்து 125-ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்ததால்இ உயிரிழப்பு எண்ணிக்கை 118-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் வெறும் 12 சதவீத பேருக்கு மட்டுமே அறிகுறிகள் இருந்தது.
உயிரிழப்பு விகிதத்தைப் பொருத்தவரை 84 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிற தீவிர நோய்கள் இருந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.